×

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 7ம் நாள்; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா: நாளை தேரோட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8ம் நாளான நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி 6ம் நாளான நேற்று மாலை தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் பவனி நடைபெற்றது. இதைதொடர்ந்து இரவு உற்சவத்தில் யானை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பகவானின் ரூபமும் தானே என்பதை விளக்கும் வகையில் மலையப்பசுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் சிவப்பு நிற மாலை அணிந்து, 7 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி, 4 மாடவீதிகளில் பவனி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வீதி உலாவில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடகா, கேரளா, அசாம், சிக்கிம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் நடைபெற்றது. அதேபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம், மற்றும் பாசுரங்களை பாடியபடியும், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்றிரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி சந்திரபிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் ஆகிய இரண்டும் தனது அம்சமே என்பதை விளக்குவதுதான் 7ம் நாள் உற்சவத்தின் தத்துவமாகும். பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நாளை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி அலங்கார ரூபத்தில் தேரில் எழுந்தருளி, மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இரவு உற்சவத்தில் குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (2ம் தேதி) காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், அன்று மாலை கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

ரூ.4.14 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 81,626 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,304 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.14 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை 31 காத்திருப்பு அறைகளில் தங்கியிருக்கும் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupathi Temple ,Brahmorchawa ,Malayapaswamy Road ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple Brahmorsavam ,Bhavani ,Brahmorshavam ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு