ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஊட்டி,டிச.25: ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு வரும் 30ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், நுந்தளா மற்றும் சின்னகுன்னூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஹெத்தையம்மன் கோயில்கள் உள்ளன.

படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் டிசம்பர் மாத இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பிற கிராமங்களை விட பேரகிணி ஹெத்தையம்மன் கோவில் திருவிழா முக்கிய விழாவாக கருதப்படுகிறது. அங்கு விழா நடக்கும் நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து படுகர் இன மக்களும் சென்று அம்மனை தரிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஹெத்தையம்மன் பண்டிகையின் போது உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், வரும் 30ம் தேதி பேரகணியில் விழா நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை எளிமையான முறையில் விழா மற்றும் பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரகணியில் விழா நடக்கும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள அறிக்கையில், ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி (புதன்கிழமை)உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும். இதற்கு பதிலாக அடுத்த மாதம் 9ம் தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் பணி நாளாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>