×

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை மோதல்

கவுகாத்தி: கவுகாத்தியில் இன்று துவங்கும் 13வது மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், கவுகாத்தியில் இன்று துவங்குகின்றன. முதல் நாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்தியா – சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை மகளிர் அணிகள், இந்திய நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு மோதவுள்ளன. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த 47 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத அணியான இந்தியா, தற்போதைய போட்டியில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் செயலாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி உள்நாட்டில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். ஐசிசி தர வரிசையில் 3வது நிலையில் உள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அட்டகாச ஃபார்மில் உள்ளார். இந்தாண்டில் மட்டும் அவர் 4 சதங்களை விளாசி உள்ளார். அதில் இரண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்த பேக் டு பேக் சதங்கள் ஆகும். அவருக்கு துணையாக பிரதிகா ராவல் சிறப்பான பங்காற்றி வருகிறார். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஜெர்மையா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல் ஆகியோர் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவது அணிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

பவுலிங்கில் கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மா, ராதா யாதவ் கலக்கி வருகின்றனர். சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, 20 வயதான ஆல் ரவுண்டர் தேவ்மி விஹங்காவை பெரிதும் நம்பி உள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அந்த அணியின் ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்சிதா சமரவிக்ரமா, கவிஷா தில்ஹாரி, நிலாக்சி டிசில்வா ஆகியோர் சிறப்பான தேர்வுகளாக கருதப்படுகின்றனர். பேட்டிங்கில் சமாரி அத்தப்பட்டு மிரட்டி வருகிறார். எனவே இன்றைய போட்டி சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐய
மில்லை.

* 4 மடங்காக உயர்ந்த மொத்த பரிசு தொகை
மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், 12 ஆண்டுக்கு பின் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் 28 லீக் போட்டிகள் நடத்தப்படும். அதில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும். இத் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி வரும் 29ம் தேதியும், 2வது அரை இறுதிப் போட்டி 30ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி, நவ.2ம் தேதி அரங்கேறும். கடந்த 2022ம் ஆண்டு வழங்கப்பட்டதை விட, தற்போதைய போட்டியில் 4 மடங்கு பரிசுத் தொகை (ரூ.123 கோடி) வழங்கப்பட உள்ளது. இது, கடந்த 2023ம் ஆண்டு, ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் வழங்கப்பட்ட தொகையை விட அதிகம்.

Tags : Women's World Cup Cricket ,India ,Sri Lanka ,Guwahati ,13th Women's World Cup One-Day International ,Women's World Cup One-Day International ,Harmanpreet… ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!