×

திருப்பதியில் 5ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் கருட சேவை தரிசனத்துக்கு திரண்ட 2.5 லட்சம் பக்தர்கள்: விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம்

திருமலை: திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான கருட சேவை நடந்தது. இதில் 2.5லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாள் பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.

இதில் காலை மோகினி அலங்காரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளிய மலையப்ப சுவாமி மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். அப்போது கிருஷ்ணரும் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் பவனி வந்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 5வது நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதையொட்டி நேற்று மலையப்ப சுவாமி சங்கு சக்கரத்துடன் தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களின் ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம் விண்ணதிர வீதிஉலா வந்தார். வீதிஉலாவில் 28 மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் அந்தந்த மாநில கலாசார கலை நிகழ்ச்சிகளும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர்.

மாடவீதியில் வலம் வந்த கருட சேவையை காண காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பால், மோர், அன்னப்பிரசாதம் தொடர்ந்து வழங்கப்பட்டது. இதனை இ.ஓ. அணில்குமார் சிங்கால் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் 24 மணி நேரமும் அரசு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

* பிரமோற்சவத்தில் இன்று பிரமோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் சுவாமி பவனி வந்து அருள்பாலிக்க உள்ளார்.

Tags : Tirupati ,Garuda Seva ,Brahmotsavam ,Tirupati Ezhumalaiyan Temple ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பிராந்திய உணவு வகைகள் அறிமுகம்