×

வைகை அணையில் மீன்பிடி நிறுத்தம் மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்

ஆண்டிபட்டி, டிச. 24: நீர்மட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் வைகை அணையில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள சுமார் 140 மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் பிடிக்கும் மீன்களில் சரிபாதி பங்கு அரசுக்கு மீனவர்கள் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 300 கிலோ வரையில் வைகை அணையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.

இங்கு ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட வகையான மீன்கள் பிடிக்கப்படும். குறிப்பாக அணையில் பிடிக்கப்படும் ஜிலேபி மீன்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வர்.71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து 60 அடியிலேயே உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து காணப்படுதால் தேங்கியிருக்கும் தண்ணீரின் பரப்பளவு அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 45 அடிக்கும் கீழே சரிந்தால் மட்டுமே மீன்கள் அதிகளவில் பிடிபடும் இதன் காரணமாக மீனவர்கள் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கு சென்ற மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள், அணையில் நீர்மட்டம் குறையும் வரை மீன்பிடிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

Tags : Fisheries officials ,fishing stop ,Vaigai dam ,
× RELATED நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் வைகை...