×

மினி கிளினிக் வேறு இடத்திற்கு மாற்ற மீரான்குளத்தில் கிராம மக்கள் திடீர் போராட்டம்

சாத்தான்குளம், டிச.24: மீரான்குளத்தில் மினி கிளினிக் அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்றியததை கண்டித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் மக்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்தில் மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம்தேதி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் மினி கிளினிக் அமைக்க, அங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன. விரைவில் திறப்பு விழா நடத்தப்பட்டு செயல்படும் என சுகாதாரதுறை மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக மினி கிளினிக் செயல்படுவதற்கான தயார் செய்யப்பட்ட அனைத்தும் எடுத்து செல்லப்பட்டன. மினி கிளினிக் வேறு கிராமத்தில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து துணை சுகாதார நிலையம் முன்பு நேற்று திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த ஊரில் இருந்து மருத்துவ தேவைக்கு சாலைபுதூர், சாத்தான்குளம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் அரசு அறிவித்தப்படி மீரான்குளத்தில் மினி கிளினிக் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், ஓய்வுபெற்ற அஞ்சலகர் செல்வராஜ், முன்னாள் பஞ்.தலைவர் ராஜக்கனி மற்றும் திமுக பிரமுகர்கள் அதிசயராஜ், அப்டாப். சில்வான்ஸ், நெல்சன் உள்ளிட்ட 40க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். மீரான்குளத்தில் மினி கிளினிக் அமைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிடில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்திட உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர், சாத்தான்குளம் தாசில்தாருக்கு மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : clinic ,
× RELATED கோமாரி தடுப்பூசி முகாம்