கவுகாத்தி: பிரபல அசாம் பாடகரான ஜூபின் கர்க் (52), வடகிழக்கு இந்திய திருவிழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடந்த 19ஆம் தேதி, கடலுக்கு அடியில் டைவிங் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது திடீர் மரணம் அசாம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
இதைத் தொடர்ந்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூபின் கர்க்குடன் அந்த சொகுசுப் படகில் உடன் இருந்தவரும், அவரது இறுதி நேரங்களில் அருகில் இருந்தவருமான இசையமைப்பாளர் சேகர் ஜோதி கோஸ்வாமி என்பவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கவுகாத்தியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அதே நேரத்தில் விழாவின் ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா சரணடைய வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
* 10 நாளில் ஆஜராக சிஐடி நோட்டீஸ்
சிங்கப்பூரில் பாடகர் ஜூபீன் கார்க் மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து அங்கிருந்தவர்கள் அல்லது அறிந்தவர்களுக்கு அசாம் காவல்துறையின் சிஐடி பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் 10 நாட்களுக்குள் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா, ஜூபீன் கார்க்கின் மேலாளர் சித்தார்த்த சர்மா மற்றும் இசைக்கலைஞர் சேகர் ஜோதி கோஸ்வாமி ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
