திருமலை: கருட சேவை முன்னிட்டு இன்று முதல் 29ம் தேதி வரை திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான கருட வாகன சேவை நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வர வாய்ப்புள்ளதால், திருமலை மற்றும் திருப்பதியில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பதி எஸ்பி சுப்பாராயுடு கூறியதாவது: கருட வாகன சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் வரும் 29ம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதை சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முடிந்தவரை பொது போக்குவரத்து மூலம் திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதியில் கருட சேவை தினத்தன்று பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு இடங்களில் கியூஆர் கோடு மூலம் வாகன பார்கிங் இருக்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருடா சந்திப்பு, அலிபிரி டோல் கேட் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அதிநவீன டிரோன் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன. திருட்டைத் தடுக்க, கூடுதல் எஸ்பி தலைமையில் நமது மாநிலம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் 300 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி, ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அருகிலுள்ள காவல்துறை பணியாளர்கள், தேவஸ்தான தன்னார்வலர்களைத் தொடர்பு கொள்ளலாம், அல்லது 112ஐ அழைக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.
