×

பிட்ஸ்

* அக்.1ல் சென்னையில் பிஎப்ஐ கோப்பை பாக்சிங்
சென்னை: தேசிய அளவில் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் வரும் அக். 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, பிஎப்ஐ கோப்பை குத்துச் சண்டை போட்டிகளை, இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் நடத்த உள்ளது. ஆடவர், மகளிர் மோதும் வகையில் 10 பிரிவுகளில் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இத்தகவலை பிஎப்ஐ தலைவர் அஜய் சிங், நேற்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.

* சிறப்பு பேட்மின்டனில் தங்கம் வென்ற சான்வி
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் ஆசியா பசிபிக் பேட்மின்டன் போட்டிகளின் வெவ்வேறு பிரிவுகளில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்த போட்டிகளில், இந்திய வீராங்கனை சான்வி சர்மா, மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பிரிவில் தங்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் அவர், சுஜிதா சுகுமாரனுடன் சேர்ந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவர் பிரிவில் அங்கித் தலால் வெள்ளிப் பதக்கம் பெற்றார். தவிர, ஆடவர் இரட்டையர் பிரிவில் அமல் பிஜுவுடன் சேர்ந்து மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவர் பெற்றார்.

* வெஸ்ட் இண்டீசில் ஷமர் ஜோசப் நீக்கம்
புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, வரும் அக். 2ம் தேதி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஷமர் ஜோசப் குறிப்பிடப்படாத காயம் காரணமாக அக். 2ல் துவங்கும் டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில், ஜோகன் லேய்ன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம், எக்ஸ் சமூக தளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது. ஷமர் ஜோசப் இடம்பெறாதது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags : Pfizer ,PFI Cup Boxing ,Chennai ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!