×

ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசின் இலவச ஆடுகள் வழங்கியதில் முறைகேடு ஊராட்சி செயலாளரை பணி நீக்க கோரி அலுவலகம் முற்றுகை

ஒடுகத்தூர், டிச.24: ஒடுகத்தூர் அருகே அரசின் இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு செய்துள்ள ஊராட்சி செயலாளரை பணி நீக்க வலியுறுத்தி மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் ஏழை எளிய குடும்பத்திற்கு இலவசமாக 4 ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இத்திட்டத்தின் கீழ் 4 ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் அதே கிராமத்தை பூர்வீகமாக கொண்டதால், ஆடுகளை வழங்க ஏழை எளிய மக்களிடம் தலா ₹1000 கேட்டு மிரட்டி வாங்குகிறாராம். தற்போது ஆடுகள் பெற வேண்டும் என்றால் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுகளை வாங்கி இருக்கக் கூடாது.

மேலும் நிலம் வைத்துள்ளவர்கள், ஒரே வீட்டில் 2 நபர்கள் என கொடுக்கக் கூடாது என பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இவை அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் 55 நபர்களிடமருந்து தலா ஆயிரம் ரூபாய் கையாடல் செய்து இருப்பதாக ஒப்புக்கொண்டார். இதனை முழுவதுமாக திருப்பி கொடுக்க வேண்டுமென போலீசார் கூறிவிட்டு அங்கு இருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விஏஓ குபேந்திரன் கூறுகையில், நாங்கள் எங்கள் வேலையை சரியாகத்தான் பார்த்தோம். ஆனால் பொதுமக்கள் கொடுத்த மனுவில் நாங்கள் கையொப்பம் செய்ததை யாரோ மாற்றி கையொப்பம் போட்டுள்ளார்கள். இதனால் தான் நிலம் இருக்கும் பயனாளிகளுக்கும் ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் எங்களது எவ்விதமான தவறும் இல்லை’ என்றார். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 2 ஆயிரம் குடும்பத்திற்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். மேலும் நிலம் இல்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. மீண்டும் தற்போது மனு கொடுத்தவர்கள் மொத்தம் 301 பேர்.

இதில் தேர்வானவர்கள் 119 பேர். ஆனால் 106 நபர்களுக்கு மட்டுமே இலவச ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பேருக்கு வந்துள்ள ஆட்டிற்கான தொகையை ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன் ஆகியோ எடுத்துக் கொண்டனர். இதேபோல் பசுமை வீடு, பாரத பிரதமர் வீடு கட்டி தருவதாக பல லட்சம் ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 20 சதவீதம் கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு அனுமதி வாங்கி கொடுப்பதாக கூறுகின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : siege ,office ,panchayat secretary ,Odugathur ,government ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...