×

கல்வியில் சிறந்த தமிழ்நாடு தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்: முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி தொடங்கி வைப்பு

சென்னை: புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் கருப்பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.

இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார். இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்”, “விளையாட்டுச் சாதனையாளர்கள்”, “புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்” மற்றும் “அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்” ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

திட்டங்களால் பயன்பெற்றவர்கள், சாதித்தவர்கள், துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். இதன் பிறகு தமிழ்நாடு முதல்வரும், தெலங்கானா முதல்வர் இணைந்து 2025-26ம் ஆண்டிற்கான “புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்” திட்டங்களைத் தொடங்கி வைப்பார்கள்.

இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

Tags : Tamil Nadu ,best in ,Chief Ministers ,M.K. Stalin ,Revanth Reddy ,Chennai ,Innovative Woman ,Jawaharlal Nehru Indoor Stadium ,Tamil ,the best in ,Chief Minister ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!