×

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர தீ: வனவிலங்குகள் ஓட்டம்

 

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்தன. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள் மட்டுமல்லாமல் சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மலைப்பாம்புகள், ராஜநாகம் உள்ளிட்ட பல வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஸ்ரீ வில்லிபுத்தூர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லை; வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது.

இதனிடையே நேற்று இரவு சுமார் 8 மணியளவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள அழகர்கோவில் வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீப்பிடித்தது. காற்றும் வேகமாக வீசியதால் மளமளவென தீ பரவியது.
தகவலறிந்த ஸ்ரீ வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின்பேரில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களும் உதவி வருகின்றனர். காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்தன. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

 

Tags : Western Ghats ,Sri Villiputhur ,Western Ghats Tiger Reserve forest ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்