×

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

காங்கயம், டிச.24: நிலத்தடிநீர் செறிவூட்டல் முற்றிலும் தடைபடும் என்பதால் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும் என தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மண்ணால் கட்டப்பட்ட அணைகளில் மிகவும் பழமையானது பவானிசாகர் அணை. சுமார் 201 கி.மீ. நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதில், ஒரு நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மட்டும் தண்ணீர் விடும் அளவிற்கு கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதி நிலம் நேரடிப்பாசனம் பெறும் போது, நீர்விடப்படாத மற்ற பாசன நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு நீர் கிடைத்து விடுகிறது. இதனால், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ஏக்கர் மறைமுகப் பாசனம் பெறுகிறது. இதுபோக, உரம்புநீர் பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. தலைமை கால்வாய்க்கு வலதுபுறம் தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் கிணறுகள் வெட்டி 60 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதில் இருந்து வடியும் நீர் கொடிவேரி பாசனத்துக்கும், காலிங்கராயன் பாசனத்துக்கும், காவிரியிலும் கலந்து பாசனநீராக பயன்படுத்தப்படுகிறது.கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகி கடலுக்கு செல்வதில்லை. கடந்த 2013ல் இந்தக் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு திட்டமிட்டது. பாசன பயனாளிகளில் எதிர்ப்பு மற்றும் எழுச்சிகாரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு கான்கிரீட் என்று குறிப்பிடாமல் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் ரூ.178 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிரதான வாய்க்கால் கரையோரம் உள்ள பழமை வாய்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமான ராட்சத மரங்கள் வெட்டப்படும். இதனால், அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு, வாய்க்கால் கரையோரம்  உள்ள கிணறுகள், போர்வெல்களில் நீரின் அளவு வெகுவாக குறையும். கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். பிஏபி திட்டத்திலும், முல்லை பெரியார் திட்டத்திலும் அமைக்கப்பட்ட கான்கிரீட் கால்வாய்திட்டம் வெற்றி பெறவில்லை. ஆகவே, கீழ்பவானி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்