×

வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 16 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

ஊட்டி,  டிச. 24: இங்கிலாந்தில் இருந்து நீலகிரி திரும்பிய 16 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா கூறினார். சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு  டிசம்பரில் இருந்து பரவ துவங்கிய கொரோனோ வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இப்பரவலை தடுக்க  தற்போது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  பயன்பாட்டிற்கு வர துவங்கி உள்ளது. விரைவில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை  பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில்  மரபியல் மாற்றம் கொண்ட வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவது உலக  நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இது தற்போதுள்ள கொரோனா வைரசை  காட்டிலும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிைலயில், இங்கிலாந்து,  ஐரோப்பிய நாடுகளில் இருந்து நீலகிரிக்கு வந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர்  விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இங்கிலாந்தில் இருந்து 16 பேர்  நீலகிரி வந்துள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை  மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:

இங்கிலாந்தில் தற்போது வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ  துவங்கியுள்ளது. கடந்த 25ம் தேதி முதல் நீலகிரிக்கு வெளிநாட்டில் இருந்து  வந்த பயணிகளை அடையாளம் காண அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில்  இங்கிலாந்தில் இருந்து நீலகிரிக்கு திரும்பிய 16 பேர் வந்துள்ளது  கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  பரிசோதிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும்  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த 20  நாட்கள் பிறகு மீண்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.  பல்வேறு நாடுகளில் இருந்தும் வர கூடிய விமானங்கள் இங்கிலாந்தில் இறங்கிய  பின்னர், இங்கு வருகின்றன. இதனால், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 650 பேர்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. எனவே,  கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டது என்று எண்ணி விட வேண்டாம். அரசு  தெரிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுபாடுகளை தொடர்ந்து பின்பற்ற  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : returnees ,spread ,UK ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...