×

காந்தலில் மினி கிளினிக் திறப்பு

ஊட்டி, டிச. 24: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் சுகாதார நிலையத்தில் மினி கிளினிக் துவக்க விழா நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து 9 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து நல பரிசுப் பெட்டகங்களை வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 28 மினி கிளினிக் துவங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நமது மாவட்டத்திற்கு 6 மினி கிளினிக் திறக்கப்படவுள்ளன. மினி கிளினிக் மூலம் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சளி காய்ச்சல் போன்றவற்றிற்கான மருந்துகள், சத்து மாத்திரைகள், புற நோயாளிகளுக்கான அனைத்து மருந்துகளும் இங்கு கிடைக்கும். எனவே, அனைவரும் மினி கிளினிக்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவுசல்யா, துணை ஆட்சியர் லோகநாயகி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : clinic ,Kandal ,
× RELATED  ராமகிருஷ்ணா பல் மருத்துவ...