×

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி: வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

பட்டுக்கோட்டை, டிச. 23: மழை வெள்ள சேதங்களை பார்வையிட தஞ்சை மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் வராதது ஏன் என்று பட்டுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சார் ஆட்சியர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். தாசில்தார்கள் பட்டுக்கோட்டை தரணிகா, பேராவூரணி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதைதொடர்ந்து சமீபத்தில் பெய்த மழையால் அழுகிப்போன நெல் பயிர்களை தங்களது கைகளில் ஏந்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து மீண்டும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது மதுக்கூர் சந்திரன், மழையால் அழுகிப்போன நெற்பயிர்களை சார் ஆட்சியர் பாலச்சந்தரிடம் காட்டி முறையிட்டார். பின்னர் விவசாயிகள் பேசியதாவது:
பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: சமீபத்தில் பெய்த மழையால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அழுகி விட்டது. சில முளைத்து விட்டது. மழை வெள்ள சேதங்களை பார்வையிட முத்துப்பேட்டைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை மாவட்டத்துக்கு வராதது ஏன். இங்குள்ள அதிகாரிகளும் மழை வெள்ள சேத மதிப்புகளை குறைத்து கணக்கிடுகினறனர். எனவே ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும்.

தம்பிக்கோட்டை ராஜராமலிங்கம்: 20 ஆண்டுகளுக்கு முன் கிராமசபை என்ற அடிப்படையில் நடந்த ஊராட்சி தேர்தலுக்கு பின் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் என்ற பட்டியல் மிகுந்த குளறுபடியுடன் ஒவ்வொரு ஊராட்சியிலும் தயாரிக்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை மறு ஆய்வு செய்து முறையான பட்டியல் வெளியிட வேண்டும் என்றார். மேலும் விவசாயிகள் பேசுகையில், ஏரி, குளம், வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். கஜா புயலால் இழப்பு ஏற்பட்ட தென்னை விவசாயிகளுக்கு புதிய தென்னங்கன்றுகளை பராமரிக்க ஊக்கத்தொகை இன்னும் வழங்கவில்லை என்றனர். சார் ஆட்சியர் பாலச்சந்தர் பேசுகையில், இனிவரும் காலங்களில் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : meeting ,Gurdwara ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...