×

தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு

ஊட்டி,டிச.23: கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையின் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுைற மற்றும் பள்ளி தொடர் விடுமுறைகள் வந்தால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுல பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரள மாநில சுற்றுலா பயணிகளே அதிகளவு வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் வார விடுமுறை என புத்தாண்டு விடுமுறை என மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.

மேலும், பல தனியார் நிறுவனங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை இம்மாதம் 24ம் தேதி முதல் வருகிறது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று உயர்ந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, பூங்கா சாலைகளில் போக்கவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். குறிப்பாக, தொட்பெட்டாவில் ‘ஜில்’ என்ற பனிக்காற்று எந்நேரமும் வீசும்.

ஆனால், இம்முறை இது வரை ஊட்டியில் உறை பனி தாக்கம் குறைந்ததால் குளிரும் சற்று குறைந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் ஊட்டியில் வெயில் வாட்டுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் கூட்டம் இம்முறை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் அடுத்த 15 நாட்களுக்கு ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், காட்டேஜ் மற்றும் லாட்ஜ்கள் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிது.

Tags : Tourist arrivals ,series holidays ,
× RELATED தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி...