பொதுக்குளத்தில் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வடிய வசதியின்றி தேங்கி கிடக்கும் அவலம்

கொள்ளிடம், டிச. 23: கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் தண்ணீர் வடிய வசதியின்றி குளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமம் மணிஇருப்பு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது குளம் உள்ளது. அதன் அருகே மற்றொரு ஊராட்சி குளம் உள்ளது. இந்த இரண்டு குளங்களும் கடந்த 20 வருட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு குளங்களும் ஆக்கிரமிப்பால் குறுகி குட்டையாக காணப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன் இந்த இரண்டு குளங்களும் பொதுமக்களுக்கு குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு பயன்பட்டு வந்தது.

ஆனால் கடந்த வருடங்களில் தொடர்ந்து மழை பொழிவு இல்லாமல் போனதாலும் வாய்க்கால்களில் தண்ணீர் வராமல் போனதாலும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வாய்க்காலும் தண்ணீரை வெளியேற்றும் வடிகால் வாய்க்காலும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக இந்த இரண்டு குளங்களிலும் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்த நிலையில் உள்ளது.

இந்த குளங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி ஆகும் இடமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருந்து வருகிறது. எனவே வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் குளங்களுக்கு எளிதில் செல்லும் வகையிலும், இந்த இரண்டு குளங்களில் இருந்து தண்ணீர் எளிதில் வெளியேறி செல்லும் வகையிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்றி வாய்க்கால்களையும் ஆக்கிரமிப்பிலிருந்து மேட்டு குளங்களை அகலம் மற்றும் ஆழப்படுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>