×

நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர் சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க தாமதம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி 2வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகை,டிச.23: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று இரண்டாவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அருகே சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் இதுவரை அப்பகுதியில் தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மீனவர்கள் சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து நேற்று முன்தினம்(21ம் தேதி) திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.  மேலும் சாமந்தான்பேட்டை மீனவ கிராம கடற்கரை பகுதியில் மீனவர்கள் கருப்புகொடிகளை கையில் ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகை ஆர்டிஓ பழனிகுமார், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து இரவாகிவிட்டதால் மீன்இறங்குதளம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளை நாளை(நேற்று) அனுப்புவதாக கூறி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு வந்தனர். சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு வரும் அதிகாரிகள் ஆய்வு செய்து நல்ல பதில் தரவில்லை என்றால் கடலில் இறங்கி போராட்டத்தை நடத்த தயங்கமாட்டோம் என்று அப்பகுதி மீனவர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று(22ம் தேதி) மீன்வளத்துறை பொறியாளர் ஜெயராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீன் இறங்குதளம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
 
இந்த பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைய அதிகாரிகள் ஆய்வு செய்த ஆவணங்கள் ஏதும் தற்பொழுது இல்லை. எனவே நமக்குநாமே திட்டம் அல்லது புதிதாக ஒப்புதல் பெற்று திட்டப்பணிகளை தொடங்கலாம் என்று தெரிவித்தனர். இதை கேட்ட சாமந்தான்பேட்டை மீனவபஞ்சாயத்தார்கள் புதிதாக திட்டம் தொடங்குவது என்பது மீண்டும் இந்த பகுதியை ஏமாற்றம் அடைய செய்வது ஆகும். ஏற்கனவே அறிவித்த திட்டம் என்ன ஆனது? சினிமா படத்தில் கிணறு காணவில்லை என்று கூறுவது போல் நீங்கள் கூறுவது இருக்கிறது. எனவே ஏற்கனவே ஒப்புதல் அளித்த திட்டப்பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறினர்.

எனவே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்றும் (22ம்தேதி) இரண்டாவது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டம் நிறைவேறும் வரை இந்த பகுதியில் வாக்குகள் கேட்டு வர யாரையும் அனுமதிக்க மாட்டோம். உடனே மீன்வளத்துறை அமைச்சர், உள்ளூர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு வந்து ஆய்வுகள் நடத்தி பணிகளை தொடங்க வேண்டும். இல்லையெனில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல விதமான போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

Tags : fish landing site ,Samanthanpet ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி