×

மும்பையில் இருந்து கடத்தி வந்து வேலூரில் சப்ளை: போதை மாத்திரைகள் விற்ற திகார் சிறை காவலர் கைது

 

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் பின்புறம், வாகன நிறுத்துமிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த 3 பேரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்த வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண் உட்பட போதை மாத்திரைகள் வாங்கி வைத்திருந்தவர்கள் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் மும்தாஜ் என்ற பெண்ணிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது மகன் முஜுபூர் ரகுமான் (28) திகார் சிறையில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அவர் விடுமுறையில் வரும்போது, மும்பையில் இருந்து கடத்தி வரும் போதை மாத்திரைகளை விற்று வந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, திகாருக்கு விரைந்து சென்ற காட்பாடி தனிப்படை போலீசார் முஜுபூர் ரகுமானை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் அவரது தங்கியிருந்த அறையில் இருந்து 9,400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரை வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவலர் கைது செய்யப்பட்டது திகார் சிறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளார்.

* கைதிகளுடன் தொடர்பு

போலீசார் கூறுகையில், ‘திகார் சிறை காவலர் முஜுபூர் ரகுமான், ஒரு போதை மாத்திரையை ரூ.30க்கு வாங்கி, வேலூரில் ஒரு மாத்திரை ரூ.300க்கு விற்பனை செய்துள்ளார். டெல்லியில் இருந்து 2 முறை ஆயிரக்கணக்கான மாத்திரைகளை வாங்கி வந்து, வேலூரில் விற்பனை செய்துள்ளார். திகார் சிறையில் பணியாற்றும் முகமதுரகுமானுக்கு, போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : Tihar Jail ,Mumbai ,Vellore ,Gadpadi police ,Gadpadi ,Vellore district ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...