×

நபிகள் நாயகம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நபிகள் நாயகம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்; இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் அவர் ஆற்றிய உரையில்; “நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்ததில் பெருமைப்படுகிறேன். ஒற்றுமைதான் கொள்கையில் வெற்றி பெறுவதற்கான முதல்படி. நபிகள் நாயகம் அன்பை, அமைதியை போதித்தார். அண்ணாவும், கலைஞரும் சந்தித்தது மிலாடிநபி விழாவில்தான்.

கலைஞர்தான் மிலாடிநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார். சமத்துவத்தை வலியுறுத்திய சிந்தனையாளர் நபிகளார். அதனால்தான் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நபிகள் சொன்ன சமத்துவத்தை, அன்பைப் புகழ்ந்தார்கள்.

இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வந்தால் முதலில் வந்து நிற்பது திமுக. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடினோம். அந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டார்களா எனக் கேள்வி எழுப்பியதும், அந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதும் யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது அதிமுக இரட்டை வேடம் போட்டதும் உங்களுக்குத் தெரியும்.. அதனால்தான் அன்வர் ராஜா போன்றவர்கள் துரோகத்தின் கூடாரமாக இருக்கிற கட்சியைப் புறக்கணித்து திமுகவில் இணைந்துள்ளார்கள்.

வக்ஃபு சட்டத்தில் அதிமுக கபட நாடகம் நடத்தியதை அனைவரும் அறிவார்கள். பாஜக செய்து வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும். இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்றுத் தரும் இயக்கமாக திமுக எப்போதும் இருக்கும். போர்களற்ற, வன்முறைகளற்ற உலகமாக நாம் வாழ வேண்டும்.

மதத்தை மார்க்கமாக பார்ப்பவர்கள் இஸ்லாமியர்கள். மார்க்கம் அன்புமயமான இருக்க வேண்டும் என்று போதித்தவர் நபிகள் நாயகம். காசாவில் நடக்கும் துயரத்தை பார்த்து மனசாட்சி உள்ள யாரும் வேதனைப்படாமல் இருக்க முடியாது” என உரையாற்றினார்.

Tags : Islamists ,Chief of ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Chief of the Prophets ,K. Stalin ,
× RELATED மக்களை காக்க குரல் தரச் சொன்னால்...