×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை வடதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலையிலும் திடீரென மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ம் தேதி மற்றும் 26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் 24ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணம், ஜெயா பொறியியல் கல்லூரி (திருவள்ளூர்) தலா 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பத்தூர், அயப்பாக்கம், கொரட்டூரில் தலா 6 செ.மீ, ஆவடி, புள்ளம்பாடி (திருச்சி), நம்பியூர் (ஈரோடு), கொரட்டூரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,north Tamil Nadu ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்