×

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாததால் தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குள் ஏதேனுமொரு தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.

இந்த அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறிய, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை கண்டறிந்து அவற்றை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் தற்போது, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்ட அறிக்கையில், “ அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29ஏ விதிகளின்கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அத்தகைய கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நாடு முழுவதும் முதற்கட்டமாக 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 22 அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன.

தற்போது இரண்டாம் கட்டமாக, 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த தேர்தல்களில் போட்டியிடாத காரணத்தால் செப்டம்பர் 18, 2025ம் தேதி 474 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 42 கட்சிகள் அடங்கும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 808 பதிவு செய்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை தொடரும் விதமாக, கடந்த மூன்று நிதியாண்டுகளில்(2021-22, 2022-23,2023-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க தவறியதற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்டும் வரவு, செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதுமுள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சார்ந்தவை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Election Commission ,New Delhi ,Election Commission ,Chief Election Commission’s… ,
× RELATED விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு...