லண்டன்: இங்கிலாந்து பயணத்தின்போது அதிபர் டிரம்ப் சென்ற ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், மாற்று ஹெலிகாப்டரில் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டார். செக்கர்ஸ் மாளிகையில் இருந்து ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் அதிபருக்கான பிரத்யேக ஹெலிகாப்டரில் அவர் பயணம் செய்தார். அப்போது, ஹெலிகாப்டரில் சிறிய அளவிலான கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, லூடன் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு விமான தளத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினர். இந்த திடீர் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அதிபரின் பாதுகாப்பிற்காக உடன் வந்த மற்றொரு துணை ஹெலிகாப்டரில் அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும் ஏறி, ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த திடீர் மாற்றத்தால், அவர்களது பயணம் சுமார் 20 நிமிடங்கள் தாமதமானது. மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது என்றும், அதிபருக்கோ அவரது மனைவிக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரை அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
