அகிம்ஸா ஆலயங்களான சிவன், விஷ்ணு கோயில்கள் ஏற்படுவதற்கு முன் பாரத தேசமெங்கும் முக்கியமான ஊர்களில் எல்லாம் இம்சை-ரத்த பலிகளை அடிப்படையாகக் கொண்ட காளி கோயில்களே சமூகத்தில் பேராதிக்கம் செலுத்தி வந்தன.சிவமதம் எனும் சைவ சமயம் தோன்றி காளி மதத்தைக் கட்டுக்குள் வைத்தது. இதையே சிவனுடைய ஊர்த்துவத் தாண்டவம், காளியின் தலை குனிவு என்று கற்பனையாகச் சொல்லப்பட்டது.
காளி மதத்தை அடக்கிய சிவமதம், அந்தக் காளிக்கு முதல் மரியாதைகளைக் கொடுத்து, அதன் அனுமதி, ஆராதனைகளுக்குப் பின்னே, அகிம்ஸா கோயில்களில் ஆராதனைகள் விழாக்களைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டது.இந்த வழக்கம்படி, நெல்லையிலே ஆதியிலே கோலோச்சிய பராசக்தி பிட்டாபுரத்தி அம்மன், வடக்கு வாய்ச் செல்வி என்று போற்றப்படுகிற இந்த மகா சக்தி வாய்ந்த அன்னை திருநெல்வேலி நகரில், மேற்கு-வடக்கு ரதவீதிகள் சேரும் இடத்திலிருந்து கன்னடியன் கால்வாயைத் தாண்டிப் போனால், சின்னஞ்சிறு ஆலயத்திலே கோயில் கொண்டிருக்கிறாள்.
ஒரு ஆள் உயரத்திற்கு ஒரே கல்லில் அமர்ந்த கோலத்தில் அருள் வடிவான அன்னை பிட்டாபுரத்தி அம்மன் காட்சி தருகிறாள். முகத்திலே அற்புதமான தெய்வீக ஒளி வீசுகிறது. அஷ்ட புஜங்களிலே சகல ஆயுதங்களும் ஏந்தியிருக்கிறாள். தலை கீழாகப் பிடித்திருக்கும் தங்க சூலம் கீழே காலடியில் கிடக்கும் மகிஷாசுரனின் மார்பை பிளந்து உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக எல்லா இடங்களிலும் கோயில் கட்டி அப்புறம் மூலவரைப் பிரதிஷ்டை பண்ணுவார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. உட்கார்ந்த நிலையில் ஆறடி உயரம் கொண்டவளாக இருக்கிறாள் அன்னை. ஆனால், கருவறை வாசலோ மிகச் சிறியதாக இருக்கிறது. ஆகவே, அம்பாள் சுயம்புவாக எழ, பின்னாளில் தான் கோயில் எடுப்பித்திருக்கிறார்கள்.
பிட்டாபுரம் என்று ஆதியிலே இந்தப் பகுதிக்குப் பெயர் இருந்ததாம். எல்லை மாகாளி, நெல்லை மாகாளி என்றெல்லாம் பெயருண்டாம். ‘‘அன்னை பராசக்தி இவள்-தன்வந்திரி இவள். அவள் அபிஷேகப் பாலை அப்படியே பிடித்து, நோயுள்ளவர்கள் முகத்திலே அடிப்பது வழக்கம். எப்பேர்ப்பட்ட அபஸ் மாரமும் அன்னையிடம் ரட்சை கட்டிக் கொண்டால், வேண்டிக் கொண்டால் பறந்தோடிப் போகும் பெரிய பெரிய மருத்துவர்கள் கைவிட்ட ‘கேஸ்’ எல்லாம் கூட குணமாகியிருக்கிறது. பாளையங்கோட்டை மருத்துவ மனையில் பணியாற்றும் பெரிய பெரிய மருத்துவர்களே, பெரிய ஆப்ரேஷன்களுக்கு முன் அன்னையின் ஆசியை வேண்டிக் கொடுக்கும்படி கேட்பார்களாம்.
ஒரு பெரிய டாக்டர். புகழ் பெற்றவர். அவரே ஒரு ஹார்ட் பேஷண்டாக இருந்தார். அவருக்கே இருதயம் பழுதுபட்டு விட்டது. ரொம்ப பயப்பட்டு விட்டார். அறுவை சிகிச்சைக்குச் சென்னை போகும் முன் பிட்டாபுரத்தி அம்மனை வந்து வழிபட்டார். ‘பயப்படாமல்போ. சிகிச்சை வெற்றிகரமாக நடக்கும்!’ என்று அம்பாள் வாக்குக் கொடுத்து அனுப்பினாள். பயந்து கொண்டே போனார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார்.
இப்படி அன்னையின் அருளால் குணமடைந்தவர்கள் வேண்டிக் கொண்டபடி பிரார்த்தனையாக செலுத்திய காணிக்கைப் பொருட்கள் ஆலயம் முழுவதும் காட்சிப் பொருளாக இருக்கின்றன.
ஆலயத்தின் முன் மண்டபத்தில் பெரிய, கையிழந்த விநாயகப் பெருமானின் சிலை இருக்கிறது. அங்கே, ஏராளமான இளம் பெண்கள், குழந்தைகள் மந்திரித்து திருநீறு பெற்றுக் கொள்ள உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த விநாயகர், கோயிலுக்குப் பின்னால் எங்கோ ஒருவர் சொத்தாக ஆதியில் இருந்ததாம். அந்நியர் படையெடுப்புக் காலத்தில் விநாயகரின் கையை உடைத்து நயினார் குளத்தில் போட்டு விட்டார்களாம்.
‘குளத்தில் இருக்கிறேன்’ என்னை எடுத்துக் கொண்டு போய் பிட்டாபுரத் அம்மன் கோயில் பூசாரியிடம் கொடுத்து அங்கேயே என்னை பிரதிஷ்டைச் செய்யுங்கள்!’ என்று அசரீரியாக விநாயகர் சொல்ல, விநாயகர் இங்கே கோயில் கொண்டதாக வரலாறு.சாதாரணமாக சிதைந்து போன உருவம் எதையும் பூஜையிலோ, கோயிலிலோ வைப்பது வழக்கமில்லை. ஆனால் அவர் இங்கே கோயில் கொண்டார். அவர் வைத்ததே ஆணை. இவரைக் கேட்டுக் கொண்டுதான் எல்லாம் நடக்கும். ஏன் நெல்லையப்பர் கணபதியின் ஆணை பெற்ற பிறகு தான் நடக்கும். வைகாசியிலே விழா நடைபெறும் போது நெல்லையப்பர் சுவாமியே இங்கு வந்து விநாயகரையும், பிட்டாபுரத்து அம்மனையும் வழிபட்டுச் செல்வார். அது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஏராளமான பக்தர்கள் இந்த பிட்டாபுரத்தி அம்மனை நாடி வருகிறார்கள். முஸ்லிம்களும் வருகிறார்கள் கிறிஸ்தவர்களும் வருகிறார்கள். அன்னையின் அபிஷேக தீர்த்த பாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள்.புட்டுதான் அன்னைக்குப் பிரியமான, முக்கிய நைவேத்தியம். பெரும்பாலான பக்தர்கள் புட்டு நைவேத்தியம் எடுப்பதாகப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இரண்டு கால பூஜையிலும் புட்டுதான் நைவேத்தியம்.
புட்டு, பெரிய தோசை அகலத்திற்கு வெள்ளை வெளேர் என்று இருக்கிறது. அன்னையின் நைவேத்தியம். ஒரு படி அரிசிக்கு, பன்னிரண்டு புட்டு தயாரிக்கிறார்கள். புட்டுக்கு மாவு இடிக்க வென்றே தனியாக ஒரு ஏமஷின் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து படி என்ற அளவில் அரிசி மாவில் புட்டு செய்கிறார்கள். இத்திருக்கோயிலுக்கு வேறு எந்த வகையிலும் நிரந்தரமாக வருமானம் கிடையாது. சொத்து, பத்து என்று ஒன்றும் கிடையாது.
ஒரு காசு கூட இல்லாமலே அன்னை தலைமுறை தலைமுறையாக இரண்டு கால பூஜைக்கும் புட்டு அமிசை செய்து கொள்வது பக்தர்களின் காணிக்கையாள் தான்! இந்த ‘புட்டுப் பிரார்த்தனை’ செய்ய விரும்புவர்கள் முன்னமேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்று மாதத்திற்கான ‘புட்டு பிரார்த்தனை’ ஆர்டர் ஏற்கனவே பதிவாகியிருக்கிறது. எல்லாம் வரிசைக்கிரமமாகத்தான் நடைபெறுகிறது. எந்தப் பிரார்த்தனையும் இல்லாத நாளில் கூட திடீரென்று யாராவது வந்து கட்டளை கொடுத்து செய்விக்கிறார்களாம். பக்தர்களுக்கு விற்பனை செய்வதோடு வெளியூருக்கெல்லாம் இந்த புட்டு பிரசாதத்தை அனுப்புகிறார்கள். இப்பிரசாதம் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் என்கிறார்கள்.
நவராத்திரி இங்கு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாளும் கொலு. பத்தாம் நாள் விஜய தசமி. விஜய தசமி அம்பாளுக்குப் பெரிய திருநாள். அன்று முழுவதும் அம்பாள் சந்தனக்காப்பிலே காட்சியளிப்பாள். அன்னையின் சிரசை காக்கா பொன் கிரீடம் அலங்கரிக்கும். தங்க சூலாயுதம் கொண்ட மகிஷாசுரமர்த்தினியாய் தரிசனம் தரும் அன்னை பிட்டாபுரத்தியம்மனைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரண்டு வருவார்களாம். ஆட்டமும் பாட்டமும் வாண வேடிக்கைகளும் நிறைந்து ஊரே விழாக் கோலம் பூண்டு கலகலக்கும் எங்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குதூகலமும் ஒரே கொண்டாட்டம் தான்!
வைகாசி ஒன்பதாம் நாள் அன்னைக்கு ஒரு ரதோற்சவம். நெல்லையப்பர் தேர் முட்டியிலேயே இந்த அம்பாளின் தேரும் இருக்கிறது. அங்கே போய் தேரில் எழுந்தருளுவாள். நெல்லையப்பரின் நாலுரத வீதிகளிலும் ‘ஜம்’ மென்று பவனி வருவாள். பிட்டாபுரத்தி அம்மன் சொல்லி மாளாத அழகு தெய்வம். மகா வரப்பிரசாதி. நெல்லையின் அதிதேவதை. இந்தப் பராசக்தியின் தரிசனம் பாபவிமோசனம் தரும்.
‘‘வரம்தரும் சூலம் ஏந்தும் மாசில் பிட்டாபுரத்தி
புரந்திகழ் ஐயனார் மற்றும் பெருந்தடந் தோள் மன்னர்
பரந்துறும் அரக்கர் தம்மைப் பழித்தொழில் ஏனையோரை
அரந்தைகள் அகல எங்கோன் அருளினால் குலைந்த வாறும்’’
என்று இந்த பிட்டாபுரத்தியம்மனைப் போற்றுகிறது திருநெல்வேலி தலபுராணம்.
நெல்லையப்பரின் நான்கு ரத வீதிகளிலும் பிட்டாபுரத்தியம்மன் பவனி வரும் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த நாலு ரத வீதி உருவானதே ஒரு தனி வரலாறு.
1559-1563-ஆம் ஆண்டில் ஆண்ட விசுவநாத நாயக்கரின் தளவாய் அரியநாத முதலியார் அமைத்தவைதான் அந்த நாலு ரத வீதிகளும். நான்கு திசைகளிலும் பிரசித்தி பெற்ற கோயில்கள்.
வாகையடி முக்கில் வாகையடி அம்மன், தெற்கு மேற்கு ரதவீதிக் கூடலில் வரப்பிரசாதியான சந்திப்பிள்ளையார், அவருக்குப் பின்புறம் தெருவில் கரியமாணிக்கம், மேற்கு வடக்கு ரத வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் பிட்டாபுரத்தியம்மனும் என கோயில் கொண்டுள்ளனர். விழாக்காலங்களில் தேர் உலா இந்த நாலுரத வீதிகளிலும் பவனி வரும் அழகே அழகு.
அமைவிடம்: நெல்லை மாவட்டம் திருநெல்வேலி நகரில் மேற்கு-வடக்கு ரத வீதிகள் சேரும் இடத்தில் உள்ள கன்னடியன் கால்வாய்க்கு அருகில் பிட்டாபுரத்தி அம்மன் கோயில் அமைந்திருக்கிறது.
டி.எம்.ரத்தினவேல்
