×

100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்ககோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.22: நூறுநாள்வேலை திட்டத்தை சுழற்சி முறையில் வழங்காமல் தொடர்ச்சியாக வழங்ககோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னுரிமை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என பாகுபடுத்தி பொது வினியோகத் திட்டத்தை சீர்குலைக்கக்கூடாது என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார்.

மத்திய, மாநில அரசுகள் உணவு, வேலை, வன்முறையற்ற வாழ்வை அனைத்துப் பகுதி மக்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை சுழற்சி முறையில் வழங்காமல் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். ரேசன் அட்டை உள்ள அனைவருக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இலவசமாக வழங்க வேண்டும். முன்னுரிமை, முன்னுரிமை அல்லாத என ரேசன் அட்டைகளைப் பிரித்து மக்களை துன்புறுத்தக்கூடாது.
வறுமைக்கோட்டுப் பட்டியலை முறையாக சீரமைக்க வேண்டும். அனைத்து என்பிஎச்எச் அட்டைகளையும் பிஎச்எச் அட்டைகளாக மாற்ற வேண்டும். வோளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணனிடம் வழங்கப்பட்டது.

Tags : Demonstration ,India ,Union ,Democratic Mather ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்