×

இனி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு;  பீகார் தேர்தலில் அறிமுகம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் புகைப்படம், வண்ண புகைப்படமாக இடம் பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி, இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களின் போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வரிசை எண், வேட்பாளர் பெயர், வேட்பாளரின் புகைப்படம் மற்றும் அவர் போட்டியிடும் சின்னம் உள்ளிட்டவை அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும்.

இதில் வேட்பாளரின் புகைப்படம் கடந்த 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே பெயரில் பலரும் வேட்பாளர்களாக போட்டியிடும் போது வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களின் புகைப்படம் சேர்க்கப்பட்டது. ஆனாலும், இந்த தகவல் அனைத்தும் கருப்பு வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்ட தாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்நிலையில், வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் சிறந்த தெளிவுத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் வாக்கு இயந்திரத்தில் இடம் பெற்றிருக்கும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதற்காக, தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் பிரிவு 49பி இன் கீழ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குச்சீட்டுகளின் வடிவமைப்பு மற்றும் அச்சிடுதலுக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, வாக்கு இயந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச்சீட்டில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் வண்ண புகைப்படமாக இடம்பெற்றிருக்கும்.

* புகைப்படத்தை அச்சிடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நான்கில், மூன்று பங்கு இடத்தில் புகைப்படம் இடம் பெறும். வாக்காளர்கள் தங்கள் விரும்பும் வேட்பாளரை சரியாக தேர்வு செய்வதற்காக இந்த நடைமுறையை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

* வேட்பாளர்களின் வரிசை எண்ணுக்கும் முக்கியத்துவம் தரப்படும். வரிசை எண்கள் சர்வதேச எழுத்து முறையிலும், எழுத்துகளின் அளவு 30 பாயின்டாகவும், தடிமனாகவும் அச்சிடப்படும்.

* சீரான தன்மையை உறுதி செய்ய, அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும், நோட்டாவும் ஒரே வடிவத்திலும், எளிதாகப் படிக்கக்கூடிய அளவுக்கு பெரிய அளவிலும் அச்சிடப்படும்

* இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் தாளின் அளவு தரம் 70 ஜி.எஸ்.எம் என்ற வகையில் இளஞ்சிவப்பு நிறத்தில் இடம்பெறும்.  இந்த மாற்றங்கள் அனைத்தும் பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகம் செய்யப்படும்.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடக்கும் அனைத்து பிற தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் வாக்காளர்களுக்கு பயனுள்ளதாகவும், தேர்தலின் தரத்தை உயர்த்தும் வகையிலும் இருக்கும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags : Election Commission ,Bihar ,New Delhi ,Bihar Assembly ,Assembly ,Lok Sabha ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...