புதுடெல்லி: பசுமை கடன்களை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் தனிநபர்கள், நிறுவனங்கள் போன்றவை தன்னார்வமாக மேற்கொள்ளும் சுற்றுசூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பசுமை கடன் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதில் காடு வளர்ப்பு,நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை ஆகிய சுற்றுசூழல் பணிகளை செய்பவர்களுக்கு அந்த பணிகளுக்கான வர்த்தக பசுமை கடன்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் 2023 அக்டோபர் 12 ம் தேதி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பசுமை கடன் திட்டம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. அதன் படி ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் மீட்டெடுக்கப்பட்ட வன நிலத்துக்கு ஈடான நிலத்தை இன்னொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் காடு வளர்ப்புக்கு மாற்றலாம். புதிய விதிகளின்படி சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் பசுமை கடன் திட்டத்தின் கீழ் இந்த வசதியை பெற முடியும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
