×

சபரிமலையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத் தகடுகளில் 4 கிலோ மாயம்: விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 துவாரபாலகர் சிலைகளில் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செம்புத் தகடுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி சமீபத்தில் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இந்த நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சென்னைக்கு கொண்டு சென்ற தங்கத் தகடுகளை உடனடியாக திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி இது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து இந்த ஆவணங்களை நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் பரிசீலித்தனர். இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019ல் பெங்களூருவைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் என்பவரின் வேண்டுகோளின் பேரில் 2 துவாரபாலகர் சிலைகள் மீண்டும் தங்கமுலாம் பூசுவதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது அவற்றின் எடை 42.800 கிலோவாக இருந்தது. ஆனால் சென்னைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அதன் எடை 38.258 கிலோ மட்டுமே இருந்தது. மொத்தம் 4.14 கிலோ குறைவாக இருந்தது.

தங்கமுலாம் பூசப்பட்ட பின்னர் இதன் எடை 38.653 கிலோவாக அதிகரித்தது. 394 கிராம் மட்டுமே கூடியது. ஆனால் சபரிமலைக்கு கொண்டுவந்த பின்னர் அதன் எடை மதிப்பிடப்படவில்லை. 4.14 கிலோ எடை எப்படி குறைந்தது என்பது குறித்து தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதற்கிடையே துவாரபாலகர் சிலைகளுக்கு கடந்த 2020ல் 3 பவுன் எடையில் நான் கொடுத்த தங்க பீடம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்று பக்தர் உண்ணிகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

Tags : Sabarimala ,Chennai ,Kerala High Court ,Thiruvananthapuram ,Travancore Devaswom Board ,Dwarapalakr ,Travancore Devaswom Board… ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...