புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எந்தவித திருப்தியும் ஏற்படவில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேசம், அரியானா,ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலத்தில் அறுவடைக்கு பின் நிலத்தில் உள்ள பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி காற்று மாசு மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்திருந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘காற்று மாசு மற்றும் பயிர் கழிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏன்.
எதன் அடிப்படையில் சமரசம் செய்கிறீர்கள். காற்று மாசால் மக்கள் படும் அவதிகளை ஏன் மாநில அரசுகள் கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த உத்தரவு என்பது தலைநகர் டெல்லியின் அண்டை மாநிலங்களுக்கு மட்டும் கிடையாது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடியதாகும் என்று காட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,‘‘குறிப்பாக இந்த விவகாரத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை மூன்று வாரங்களில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதேப்போன்று இந்த துறைகளில் இருக்கும் உயர் காலி பதவிகளையும் ஆறு மாதங்களில் நிரப்பிட வேண்டும். இதுபோன்ற ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை மாநில அரசுகள் நிரப்பத் தவறியது என்பது கண்டிக்கக்தக்கதாகும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
