பெங்களூரு: கர்நாடக மாநிலம் சட்சனா நகரில் உள்ள அரசு வங்கியில் ரூ.1.04 கோடி ரொக்கம் மற்றும் சுமார் 20 கிலோ தங்கநகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் சட்சனா நகரில் அரசு வங்கி கிளை உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அலுவல் நேரம் முடிந்த பின்னரும், மேலாளர் வெங்கடேஷ் மற்றும் சில ஊழியர்கள் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தனர். மாலை 6.20 மணியளவில் கருப்பு முகமூடி, வெள்ளை தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த 3 மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.
அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய அவர்கள், மேலாளர் வெங்கடேஷ், காசாளர் மகேந்தஷையும் கட்டிப்போட்டனர். மற்ற ஊழியர்களை கழிப்பறைக்குள் போட்டு அடைத்துவைத்தனர். முக மூடி நபர்கள் 3 பேருக்கும் 20-30 வயது இருக்கும். கையில் துப்பாக்கிகள், கத்திகளை வைத்திருந்தனர். பின்னர், வங்கியின் கஜானாவில் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தங்க நகைகள், ரூ.1.04 கோடி ரொக்கம் ஆகியவற்றை மூட்டை கட்டி கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர் அங்கிருந்து தப்பிச்சென்ற பிறகு வங்கி ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் வந்து அவர்களை காப்பாற்றினர். பின்னர், மேலாளர் வெங்கடேஷ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் வங்கியை பார்வையிட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமூடி கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் அனைத்தும், வாடிக்கையாளர்கள் நகைக் கடனுக்காக வங்கியில் ஒப்படைத்த நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
* போலி நம்பர் பிளேட் கொண்ட கார்
கொள்ளையடிக்க குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி நம்பர் பிளேட் கொண்ட காரைப் பயன்படுத்தினர். கொள்ளையடித்த நகைகளுடன், அவர்கள் மகாராஷ்டிராவின் பந்தர்பூர் நோக்கிச் சென்றனர். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுலஜந்தி என்ற கிராமம் வழியாக அவர்கள் சென்றபோது, அந்த வாகனம் இருசக்கர வாகனத்துடன் மோதியது. பின்னர் கிராம மக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் தனது உடைமைகளுடன் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
