புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு சர்வதேச வங்கிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும் இந்த கடன்களுக்கு வருடந்தோறும் மட்டும் ரூ.45,000 கோடி வட்டியாக அரசு செலுத்தி வருகிறது என திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 7 ஆண்டுகளில் சர்வதேச வங்கிகளிடம் இருந்து ஒ்ன்றிய அரசு ரூ.8,03,300 கோடி கடன் வாங்கியுள்ளது. இன்று(நேற்று) மோடி பிறந்த நாள். இதையொட்டி மக்களுக்கு பரிசாக ஏராளமான திட்டங்களை அரசு அறிவிக்கும். ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கும் போது மோடி அங்கு சென்று பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவிப்பார். 7 ஆண்டுகளில் சர்வதேச வங்கிகளில் இருந்து இந்தியா அதிகளவிலான தொகையை கடன் பெற்றுள்ளது. 8 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.45,000 கோடி மட்டும் வட்டி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவின் பட்ஜெட்டில் உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு தொகைக்கு சமம். மோடியின் தவறான தேர்தல் நேர வாக்குறுதிகளுக்காக இந்தியா கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்குகிறது. இந்த தொகையை மக்கள் திருப்பி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
