புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5%, 12%, 18%, 28% என 4 வரி விகிதங்கள் தற்போது உள்ளன. இதற்கிடையே, சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. அன்றாட பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் 5% வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டன. மேலும், ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத சிறப்பு வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் பொருட்களுக்கான மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) வரி விகிதங்களை ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை பின்பற்றி, மாநில ஜிஎஸ்டிக்கான விகிதங்களை அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை முதல் 2 வரி விகிதங்கள் கொண்ட ஜிஎஸ்டி 2.0 நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
