×

தந்தை பெரியார் 147வது பிறந்த நாள் விழா: திருச்சியில் அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

திருச்சி: தந்தை பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த போது, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர், வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பெருந்திரளான பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தந்தை பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் அவர்கள் தலைமையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சமூக நீதி நாள் உறுதிமொழி

*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!

*சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய
செயல்பாடுகள் அமையும்!

*சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!

*மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

*சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

இந்நிகழ்வில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
எஸ்.இரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, திருமதி கனிமொழி, துரை வைகோ, அருண் நேரு, கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.செந்தில்பாலாஜி, எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், அப்துல் சமது, எஸ்.கதிரவன், என்.தியாகராஜன், ஸ்டாலின் குமார், தமிழரசி, முத்துராஜா, துரை சந்திரசேகர், நீலமேகம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Periyar ,Chief Minister ,M.K. Stalin ,Trichy ,Tiruchirappalli Central Bus Stand ,Tiruchirappalli District Collectorate ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்