லண்டன்: இங்கிலாந்தின் லங்காஷயர் மாகாணத்தில் உள்ள பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமல் போஸ் (55) என்பவர், கடந்த 2017 முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தன்னிடம் பணியாற்றிய 5 இளநிலை பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தனது உயர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சைக்கு தயாரானபோது செவிலியரிடம் உடல் ரீதியாக பாலியல் சேட்டை செய்தது தொடர்பான புகார்கள் குவிந்தன. இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அமல் போஸ் மீதான 12 பாலியல் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி இயன் அன்ஸ்வொர்த், அமல் போஸின் நடத்தை பாலியல் நோக்கம் கொண்டதாகவும், திட்டமிட்டதாகவும் இருந்ததாகக் கண்டித்தார். இதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவரது பெயர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெறவும் உத்தரவிடப்பட்டது. மருத்துவர் வேலையை இழந்த அமல் போஸ், தீர்ப்பு வழங்கப்படும்போது உணவு பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
