சென்னை: கடந்த செப். 3ம் தேதி டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து ஒன்றிய அரசு அறிவித்தது. வரும் செப்.22 முதல் இந்த ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம்,ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தனது சமுக வலைதளப்பதிவில் கூறியதாவது:
12 சதவீத வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருட்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளன என்பதில் நிதியமைச்சர் பெருமைப்படுவது புரிந்துகொள்ளத்தக்கது. வரி விகிதங்களைக் குறைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனல் ஒரு கேள்விக்கு பதிலளிக்கவும்:
5 சதவீதம் என்பது இப்போது ஒரு நியாயமான மற்றும் பொருத்தமான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் 8 ஆண்டுகளுக்கு நியாயமான மற்றும் பொருத்தமானதாக இல்லை..? கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்திய நுகர்வோரைச் சுரண்டவில்லையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
