×

துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் திருவாரூர் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது

திருவாரூர், டிச. 21: திருவாரூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் இல்லாமல் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. திருவாரூர் பவித்திர மாணிக்கத்தில் மின்சார வாரியத்தின் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருந்துவருகிறது. இங்கிருந்து கப்பல் நகர் என்ற இடத்தில் இருந்து வரும் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து திருவாரூர் நகரில் புது தெரு ,வடக்கு வீதி, கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி ,பனகல் ரோடு, நேதாஜி சாலை, நெய்விளக்கு தோப்பு தென்றல் நகர், ராமநாதன் நகர், கொடிக்கால்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சேந்தமங்கலம், ஈ.பி காலனி, பள்ளி வாரமங்கலம், திருப்பள்ளி முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு ஊரக பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மின்சாரமானது துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரம் வரையில் மின்சாரம் வழங்கப்படாமல் இருந்ததன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகர் மற்றும் ஊரக பகுதி முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மேற்படி 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திலிருந்து 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் செல்லும் கம்பியில் பழுது ஏற்பட்டு அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த கப்பல் நகர் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் இதுபோன்று அடிக்கடி பழுது ஏற்படுவதன் காரணமாக இதில் இருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகர் உட்பட அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படுவதால் வரும் காலங்களில் இது போன்று பழுது ஏற்படாமல் இருப்பதற்கு அதற்கான சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,city ,substation ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...