×

திருவண்ணாமலையில் 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க நடவடிக்கை தேவை: ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை

 

சென்னை: திருவண்ணாமலையில் 554 ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட வன பகுதியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கண்காணிப்பு குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 6 மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. திருவண்ணாமலையில் 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

Tags : Tiruvannamalai ,Chennai ,Thamaraikeni ,Tiruvannamalai… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...