×

கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு தடுக்கும் விதிகளை 2 மாதத்தில் வகுக்க வேண்டும்: யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய விவகாரமான, சாதிய அடிப்படையிலான துன்புறுத்தலை கல்வி நிறுவனங்களில் எதிர்கொண்டு உயிரை மாய்த்து கொண்ட ரோஹித் வெமுலா மற்றும் பயல் தத்வி ஆகியோரின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி)-2012, எனும் விதிமுறையை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கடுமையாக அமல்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள சாதிய பாகுபாட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இது போன்ற சாதிய பாகுபாடு பிரச்சனைகளை தீர்க்க ஏற்கனவே பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக 391 பரிந்துரைகள் பல்கலைக்கழக மானிய குழு பெற்றுள்ள நிலையில், அதனை பரிசீலிக்க ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நிபுணர் குழு அளித்த அறிக்கை என்பது இப்போது பல்கலைக்கழக மானிய குழுவின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தற்போது பல்கலைக்கழக மானிய குழு மற்றும் நிபுணர் குழுவின் கீழ் உள்ளதால், அவர்கள் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம். அப்படியென்றால் இதற்கான கால வரம்பை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது மனுதாரரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே கல்வி நிலையங்களில் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகளை தடுக்கக்கூடிய வகையிலான விதிமுறைகளை எட்டு வாரங்களுக்குள், அதாவது இரண்டு மாதத்தில் இறுதி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,UGC ,New Delhi ,Rohit Vemula ,Payal Tadwi ,University Grants Committee ,
× RELATED காரை திறந்தபோது வாகனம் மோதியதால்...