×

சில்லி பாய்ன்ட்…

* ஆகஸ்டில் சிறந்த வீரர் முகம்மது சிராஜ் தேர்வு
துபாய்: இங்கிலாந்து அணிக்கு எதிரான, கடைசி மற்றும் 5வது டெஸ்டில் அபாரமாக செயல்பட்ட இந்திய பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக, ஐசிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிராஜுடன் சேர்த்து அயர்லாந்து வீரர் ஒர்லா பிரெண்டர்காஸ்டும், ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடனான 5வது டெஸ்ட் போட்டியில் முகம்மது சிராஜ், முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்தியா, 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

* மல்யுத்த வீரர் அமான் மீது டபிள்யுஎப்ஐ நடவடிக்கை
கொல்கத்தா: குரோஷியா தலைநகர் ஜாக்ரெபில் நடந்த, 57 கிலோ பிரிவு மல்யுத்த சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தைய போட்டியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமான் ஷெராவத், வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவ் உடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், அமானின் எடை, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அமானுக்கு எதிராக, இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யுஎப்ஐ) நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, டபிள்யுஎப்ஐ தலைவர் சஞ்சய் சிங் நிருபரிடம் கூறுகையில், ‘முந்தைய நிகழ்வுகளில் இருந்து அமான் ஷெராவத் பாடம் கற்றதாக தெரியவில்லை’ என்றார்.

* போட்டி நடுவர் மீது ஐசிசியிடம் பிசிபி புகார்
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட், இந்தியா – பாக். அணிகள் இடையே கடந்த 14ம் தேதி நடந்தது. போட்டியின் துவக்கத்தில் டாஸ் போடும்போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுடன், பாக். கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்றார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களும், கேப்டனும், பாக். அணியினருடன் கை குலுக்காமல் ஓய்வு அறைக்கு திரும்பினர். இந்நிலையில், டாஸ் போடும்போது இந்திய கேப்டனுடன் கை குலுக்க வேண்டாம் என, பாக். கேப்டனிடம் போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்ட் கூறியதாகவும், அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி), பாக். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிபி) புகார் அளித்துள்ளது.

Tags : Mohammed Siraj ,Dubai ,England ,ICC ,Siraj… ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...