×

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கீரனூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்

புதுக்கோட்டை, டிச.21: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நிலையம் நெரிசலில் சிக்கி தவிப்பதால் உடனடியாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட 8 பேரூராட்சிகளில் ஒன்றாக கீரனூர் பேரூர்ராட்சியாக உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. கீரனூர் புதுக்கோட்டை- திருச்சியின் மையப் பகுதியாகவும் உள்ளது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கீரனூர் வழியாகத்தான் செல்லும். அதேபோல் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கீரனூர் பேருந்து நிலையம் வந்துதான் செல்கின்றது. இதேபோல் கீரனூரை சுற்றி 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், உரங்களை வாங்க கீரனூர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கீரனூர் பேருந்து நிலையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து கட்டப்பட்டது. அதில் இருந்து எந்த பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. மேலும் பேருந்து நிலையம் அருகே பல வணிக கடைகள் அதிகரித்துவிட்டது. கீரனூர் பேருந்து நிலையத்தின் உட்புறம், பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி சிலை செல்லும் சாலைகளில் அதிக அளவு தரைக்கடைகள் அதிகரித்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த இரு வழிச்சாலை தற்போது ஒரு வழிச்சாலையாகத்தான் உள்ளது.இதனால் பேருந்துகள் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் பழக்கடைகள், பூக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறிக்கடைகள் அதிக அளவில் அதிகரித்துவிட்டது. மேலும் பேருந்து நிலைய கட்டிடமும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பல நாட்களாக போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் வாடகைக்கும் இயங்கும் கடைகள் அனைத்தும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துதான் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் காத்திருக்கும்போது அந்த இடத்தில் நிற்கும் பேருந்து வந்துவிட்டால் பயணிகள் வேறு இடத்திற்கு நகர்ந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல், கடைகளின் ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய கண்டிப்பாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கீரனூரை சுற்றியுள்ள அனைத்து கிரமங்களும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இவர்கள் இடுபொருட்கள் வாங்க கீரனூர்தான் வர வேண்டும். மேலும் கடன்கள் பெற சிட்டா, பட்டா, அடங்கல் வாங்க வருவாய்துறை அலுவலகத்திற்கு கீரனூர் வர வேண்டும். ஆனால் கீரனூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரப்பு அதிகரித்துவிட்டது. இதனால் பேருந்துகள் வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயிகள் வாங்கும் உரங்கள், இடுபொருட்கைள வைத்துகொண்டு நிற்ககூட இடம் இல்லாமல் கடைகள் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் நின்று செல்ல போதிய இடவசதிகள் இல்லை. எனவே கீரனூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு அரசு முழு முயற்சியையும் எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : bus stand ,Keeranur ,
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...