×

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருந்து வருபவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே கடந்த 6ம் தேதி நின்றுகொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரை காவல்துறை ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Airport Murthy ,Chennai ,Airport' Murthy ,Tamil Nadu Party ,Liberation Leopards Party ,
× RELATED தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம்...