×

தமிழகத்தில் 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இடி, மின்னலுடன் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல வரும் 17ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,southern Odisha ,northern AP ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில்...