×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

பொள்ளாச்சி, டிச.21: கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரில் உள்ள பழைய (மத்திய பஸ்நிலையம்) மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், முக்கிய விடுமுறை நாட்களிலும் பயணிகள் வசதிக்காக தொலைதூர பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு தொடர்ந்திருந்தால், சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை என முக்கிய பண்டிகை காலங்களில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், ஊரடங்கில் பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்ந்துள்ளது.

இதில், 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதன்பின் 26ம் தேதி சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையாக உள்ளது. இதையொட்டி, பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை என தொடர்ந்து 3 நாட்கள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக,  ஈரோடு, கரூர், மதுரை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக இயக்கப்படுவதாகவும், கூட்டத்தை பொருத்து, அந்த நேரத்தில் மேலும் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Christmas ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...