சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு நோக்கி பயணித்து மகாராஷ்டிராவுக்கு செல்லும் போது காற்று திசை மாறி வீசி தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக திண்டுக்கல் கரூர் மாவட்டம் தொடங்கி வங்கக் கடலோரம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநில கடலோரப் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. அது மேற்கு நோக்கி பயணித்து மகாராஷ்ட்ராவுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காற்று திசை மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக வடமேற்கில் இருந்து வரும் வெப்ப நீராவியை, தென் தமிழகப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியானது ஈர்க்கும் என்பதால் காற்று திசை மாறி வங்கக் கடல் நோக்கி செலுத்தப்படும். இந்த நிகழ்வு டெல்டா மாவட்டம் வரை காற்றை குவிக்கிறது.
இதையடுத்து தமிழகத்தில் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மழை பெய்யும். டெல்டாவில் இன்று மழை பெய்யும். புதுக்கோட்டை தஞ்சை முதல் வட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யும். தெற்கில் இருந்து காற்று தரைப்பகுதி நோக்கி வீசும் போது, தமிழகத்தில் மழை பெய்யும். வட மாவட்டங்கள் வடகடலோரப் பகுதிகள், நாகப்பட்டினம் திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் பகுதிகளிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுசேரி, செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை மற்றும் இரவில் மழை பெய்தது.உள் மாவட்டங்களிலும் வெப்பம் குளிர்ந்து சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அதிகாலையில் கடலோரப் பகுதியில் இரு காற்று இணைவு காரணமாக டெல்டா பகுதி தொடங்கி பழவேற்காடு வரையில் மழை பெய்யும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. 14ம் தேதி தென்மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை ஒட்டியுள்ள கேரளப் பகுதி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மாவட்டங்களில் மழை பெய்யும். 15 மற்றும் 16ம் தேதிகளில் நல்ல மழை பெய்யும். 15ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
குறிப்பாக பாலக்காட்டு கணவாய் பகுதி உட்பட ஈரோடு, கோவை மாவட்டப் பகுதிகளில் 16ம் தேதி பரவலாக பெய்யும். அத்துடன் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 17ம் தேதி டெல்டாவில் மழை பெய்யும். வடக்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும். 18 மற்றும் 19ம் தேதிகளில் மேலும் மழை தீவிரம் அடையத் தொடங்கிவிடும். இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
