×

நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

சென்னை: நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினால் அங்கு சுற்றுலா மற்றும் இதர காரணங்களுக்காக சென்று வெளியேற இயலாமல் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, டெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்டுவர டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டை சார்ந்த 116 பேர் பத்திரமாக நேற்று முன்தினம் இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர். மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 011-24193300 கைபேசி எண்: 9289516712 (வாட்ஸ்அப்) மின்அஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils ,Nepal ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...