×

மாதம் ரூ.6 லட்சம் வீட்டு வாடகையை நண்பர்கள் கட்டும் நிலையில் ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு வாங்கிய அண்ணாமலை: பரபரப்பு தகவல்கள்

* முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் ஒப்புதல் அறிக்கை வெளியீடு
* நொய்யல் ஆற்றையும் ஆக்கிரமிப்பு
* புதிய நிறுவனத்தை தொடங்க மனைவி பெயரில் பத்திரப்பதிவு

கோவை: மாதம் ரூ.6 லட்சம் வீட்டு வாடகையை நண்பர்கள் கட்டும் நிலையில் ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு அண்ணாமலை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு ஒப்புக்கொண்டார். மேலும், வாங்கிய நிலத்தை மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளார். விரைவில் புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அங்கு ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியதாகவும், அப்போது பாஜ முக்கிய பிரமுகர் மூலம் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்தே, கடந்த 2020ல் ஐபிஎஸ் பதவியில் இருந்து அண்ணாமலை ராஜினாமா செய்தார். பின்னர் தமிழக பாஜவில் இணைந்த அவருக்கு, குறுகிய காலத்தில் பாஜவின் மாநில தலைவர் பொறுப்பு கிடைத்தது. 2021 ஜூலை முதல் 2025 ஏப்ரல் வரை பாஜவின் மாநிலத் தலைவராக பணியாற்றினார். அப்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்தபடி புகார்களை அள்ளி வீசினார். அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது, அவற்றை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார். ஆனால், ஆதாரத்தை வெளியிடாமல், அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த குற்றச்சாட்டுக்கு தாவிவிடுவார். இப்படியே பொய்த்தகவலாக கூறியதோடு ஆதாரத்தை வௌியிடுவதே இல்லை.

இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தடாலடி அரசியல் செய்து வந்த அண்ணாமலை, பாத யாத்திரை, சாட்டையடி போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் அரசியல் தளத்தில் பேசுபொருளாக இருந்து வந்தார். அதேசமயம் ரபேல் வாட்ச் வாங்கிவிட்டு அதற்கான போலி பில் காட்டியது கடும் விவாத பொருளாக மாறியது. உலகிலேயே மொத்தம் 500 பேருக்கு மட்டுமே இந்த வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரபேல் வாட்ச் வைத்திருக்கும் ஒரே நபர் நான்தான் என்றார். ஆனால், அதற்கான விலையை முறையாக சொல்லாமல், லோக்கல் கடையில் வாங்கிய ஒரு பில் கொடுத்தார்.

இதேபோல், சென்னை இசிஆரில் மாதம் ரூ.6 லட்சம் வாடகைக்கு சொகுசு பங்களாவில் குடியிருந்தார். அதையும் நண்பர்களே செலுத்துவதாக கூறினார். கோவையிலும் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்கு நண்பர்கள்தான் வாடகை கொடுப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் அவரது மனைவி பெயரில் நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அதற்கான வருமானத்தை முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலை நண்பர்கள் மற்றும் மனைவியின் வங்கி கணக்கில் பெரிய அளவிலான தொகை மாதம் தோறும் வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அண்ணாமலைக்கு சிலர் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஏழை விவசாயி மகன் வசிக்கும் சொகுசு பங்களாவின் வாடகையை கொடுக்கவே வழி இல்லாமல் நண்பர்கள் உதவியால் வாழும் அண்ணாமலை, கோவையில் ரூ.80 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு வாங்கி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக அண்ணாமலை மீது சமூக வலைதளங்களில் பரபரப்பு புகார் எழுந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நேர்மையான அதிகாரிக்கு ரகசியமான சொத்தா? ஏழை விவசாயி மகனுக்கு ரூ.80 கோடி சொத்தா? இந்த சொத்துக்கான உண்மையான ஆதாரத்தை அண்ணாமலை வெளியிடுவாரா? முறைகேடான பணத்தில் வாங்கியதால் வெறும் ரூ.4.5 கோடிக்கு பத்திரப்பதிவா? என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் வாங்கியுள்ளனர். அதில், 7 ஏக்கர் அளவிற்கு பாக்கு பயிரிடப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் வாழை, நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து அண்ணாமலை வாங்கி உள்ளார்.

இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது. இதை மறைத்து மொத்த நிலத்திற்கும் சேர்த்து வெறும் ரூ.4.5 கோடியை செக்காக கொடுத்து நிலம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவிற்கு அண்ணாமலை நேரில் செல்லாத நிலையில், அவரது மனைவி மட்டும் சென்றுள்ளார். இந்த நிலத்தை அவர் ஜூலை 12ம் தேதி வாங்கியுள்ளார். இந்த நிலத்தை வாங்க அண்ணாமலை, அவரது மனைவி அகிலாவுக்கு பொது அதிகாரம்(பவர்) வழங்கியுள்ளார்.

இந்த பொது அதிகாரம், கோவை காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.80 கோடி மதிப்பிலான சொத்தின் உண்மையான மதிப்பிற்கு பதிலாக விதிமுறைகளை மீறி அண்ணாமலை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சொத்து வாங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலம் நொய்யல் ஆற்றில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆற்று இடத்தை ஆக்கிரமித்து அண்ணாமலை மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜ முன்னாள் தலைவர் என்ற பெயரை பயன்படுத்தாமல், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலன், இயற்கை விவசாய நலன் தொடர்பாக நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக கவனத்திற்கு வந்தது. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் ‘வீ தி லீடர்ஸ்’ அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஜூலை 12ம் தேதியன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை நான் என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜூலை 10 காளப்பட்டி(தொண்டாமுத்தூரைத்தான் தெரியாமல் கூறியுள்ளார்) பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவிற்கு, எனது பவர் ஆப் அட்டர்னி வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ. 40 லட்சத்து 59 ஆயிரத்து 220 செலுத்தியுள்ளோம். மேலும் ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான். நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில், பாஜ மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம்.

தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும். இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும். காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை மட்டுமே அண்ணாமலை சொல்லி உள்ளார். ஆனால், இந்த இடத்தை எவ்வளவு கொடுத்து வாங்கினார், இதற்கு ஆவணங்களை அண்ணாமலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒரே ஆண்டில் இவ்வளவு பணம் வந்தது எப்படி?
அண்ணாமலை கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அதில், 2022-2023ல் தனக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்ததாகவும், அவரது மனைவிக்கு ரூ.6 லட்சம் வருமானம் வந்துள்ளதாகவும் கணக்கு காட்டியுள்ளார். இந்த வருமானத்திற்கு அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரைதான் கடன் கிடைக்கும். கடந்த ஆண்டில் அவர் தனது எந்த சொத்துகளையும் விற்றதாக தெரியவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஒரே ஆண்டில் ரூ.4.5 கோடி பணம் வந்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

* பாஜவில் இருந்து விலகுகிறாரா?
தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சமீபகாலமாக பாஜ டெல்லி மேலிடத்திற்கும் அண்ணாமலைக்கும் கடும் மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை மீது பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். தமிழகத்தில் பாஜவை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கட்சி தலைமை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை, டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். மேலும், சமீப காலமாக பாஜ நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார்.

கடந்த காலங்களில் வழக்கமாக அண்ணாமலை மீது ஏதாவது புகார் எழுந்தால் தொடர்பே இல்லாமல் பாஜவையும், மோடியையும் துணைக்கு இழுப்பதோடு, பாஜ லெட்டர் பேடில் தனது பதவியை போட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிடுவார். ஆனால், முதன்முறையாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சி பெயருக்கு பதிலாக அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அறிக்கை வெளியாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் அவர் பாஜவில் இருந்தே விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

* நிலம் வாங்க உதவினாரா எஸ்.பி.வேலுமணி?
அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரதீப் என்பவரிடம் இருந்து அண்ணாமலை இந்த நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் மொத்தம் 15 பேருக்கு பாகம் இருந்துள்ள நிலையில், மற்றவர்கள் அனைவரிடம் பேசி அண்ணாமலைக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியதாக கூறப்படுகிறது.

* இல்லாத அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக சொன்ன அண்ணாமலை
அண்ணாமலை வாங்கிய நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. ஆனால், கடந்த ஜூலை 10ம் தேதி தனது மனைவி அகிலாவிற்கு காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் பவர் ஆப் அட்டர்னி வழங்கியதாக அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். உண்மையில் காளப்பட்டி பகுதியில் எந்த சார் பதிவாளர் அலுவலகமும் இல்லை. சரவணம்பட்டி பகுதியில்தான் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே, அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய் என்று மீண்டும் அவரே நிரூபித்து உள்ளார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags : Annamalai ,IPS ,Noyyal river ,Coimbatore ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...