- ராதாகிருஷ்ணன்
- 15 வது துணைத் தலைவர்
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- மோடி
- யூனியன்
- புது தில்லி
- ஜனாதிபதி திரௌபதி முருமு
- துணை ஜனாதிபதி
- ஜகதீப் தன்கர்
புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணைஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்தவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி களமிறக்கியது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத்துறை அமைச்சர் கட்கரி, பாஜ தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கைய்யா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் , ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விழாவில் கலந்து கொண்டார். அவர் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
இதை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ண ஸ்தலில் மலர் அஞ்சலி செலுத்தினார். அங்கு அவரை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார். அப்ேபாது மாநிலங்களவை பொதுச்செயலாளர் பி.சி. மோடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து புதிய மாநிலங்களவை தலைவர் பதவியை சி.பி.ராதாகிருஷ்ணன் செப்.12ஆம் தேதி முதல் ஏற்றுக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மரக்கன்று நட்டார்.
* 52 நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தன்கர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21 அன்று அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. அவரைப்பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. யாரும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு விழாவில் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த, 52 நாட்களுக்கு பிறகு தன்கர் முதன்முறையாக பொது வெளியில் தோன்றினார். விழாவில் முன்வரிசையில் வெங்கையா நாயுடுவுக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தார். வெங்கையாநாயுடுவுடன் அவர் உரையாடிக் கொண்டிருந்தார். மற்றொரு முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியும், வெங்கையா நாயுடுவுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்வில் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கரும் கலந்து கொண்டார்.
* மகாத்மாவுக்கு அஞ்சலி
பதவி ஏற்கும் முன்பு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கும், முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், சரண்சிங் நினைவிடங்களுக்கும் சென்று
சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
* முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10 வரை இருந்தது.
* அரசியலமைப்பின் படி, மரணம் அல்லது ராஜினாமா காரணமாக ஏற்படும் காலியிடத்தை நிரப்ப பதவியேற்கும் தற்போதைய துணை ஜனாதிபதிக்கு முழு ஐந்து ஆண்டு பதவிக்காலம் கிடைக்கும்.
* அந்த அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 2030 செப்டம்பர் 11 வரை துணை ஜனாதிபதி பதவியை வகிப்பார்.
* சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு பிறகு துணை ஜனாதிபதி பதவியை வகிக்கும் 3வது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.
* கார்கே பங்கேற்பு ராகுல் புறக்கணிப்பு
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணனுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். கார்கே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். அதே சமயம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விழாவை புறக்கணித்தார்.
