நெல்லை, செப். 13: நாங்குநேரி தொகுதி ரூபி மனோகரன் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று களக்காடு சிதம்பராபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாயில் ரூ.6.12 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. களக்காடு சிதம்பராபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியன் கால்வாயில் தற்போது தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாலத்தின் மேல் நீர் செல்லும். அதனால் போக்குவரத்து தடைபட்டுவிடும். திடீரென காட்டாற்று வெள்ளத்தினால் ஏற்படும் காலங்களில் உயிர்ப்பபலி ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் நேரில் அந்த இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டு அந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் பாலம் அமைக்க கோரிக்கை மனு அளித்தார். அதனை ஏற்று நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.12 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க நிதி பெற்றுத் தந்த நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏக்கு களக்காடு நகராட்சி மற்றும் சிதம்பராபுரம் மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
