×

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘இதுவும் கடந்து போகும்’ நிகழ்ச்சி

கோவை, டிச.21 : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘இதுவும் கடந்து போகும்’ நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவர் சிவராமன் பேசியதாவது: தற்போது உள்ள காலக்கட்டத்தில்  ஆரோக்கியம் என்பது ஒரு தனி நபர் தன்னுடைய உடல்நலத்தை மட்டும் பேணிக்காப்பது மட்டுமல்ல, உடல் நலத்தையும் தாண்டி அவரது உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் சமுதாயமும் ஆரோக்கியமாக இருக்கும். கொரோனாவால் இவ்வுலகம் ஸ்தம்பித்து இருந்தாலும், மனிதர்கள் மறந்த பல விஷயங்களை கொரோனா நினைவூட்டி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கில் முதல் ஐந்து மாதம் நாம் அனைவரையும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, நாம் நம் குடும்பத்தார்களுடன் மனம் விட்டு பேசுவது, ஒன்றாக சமைப்பது விளையாடுவது மற்றும் சரியான நேரத்திற்கு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்களை நாம் தவறாமல் செய்து வந்தோம். முக்கியமாக, பெரும்பான்மையான மக்கள் வீட்டில் சமைத்த உணவை உண்டனர்.
 இதன்பலனாக, சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் பரவலாக குறைந்துள்ளது என மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். கொரோனாவிற்கு இந்தியா உள்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.


கொரோனா தடுப்பூசி பற்றி வதந்திகள் பொதுமக்களை பீதியடைய செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.  இந்த தடுப்பூசி நம்மை காப்பாற்றுவதற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காப்பாற்றுவதற்காகும். கொரோனா முற்றிலும் இவ்வுலகை விட்டு செல்லும் வரை நாம் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம்